கோவை: கோவை நாயக்கன்பாளையம் ஊராட்சி துணை தலைவராக பதவி வகித்து வருபவர் திரு. சின்னராஜ் (வயது 61). இவர் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள இந்திரா காந்தி வணிக வளாகத்தில் உள்ள கடைகள் ஏலத்திற்கு வர இருப்பதனை அறிந்து அந்த ஏலத்தில் கலந்துக்கொள்ள முடிவு செய்தார். மேலும் அதற்காக தனக்கு ரூ. 5 லட்சம் சொத்து மதிப்பு உள்ளதற்கான சான்றிதழ் வேண்டியும் வருவாய் துறையினரிடம் விண்ணப்பித்து இருந்தார்.
அவரது விண்ணப்பித்தினை பரிசீலித்த வருவாய்த்துறை அதிகாரிகள் ரூ.15 லட்சம் வரை சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்கலாம் என்று பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் கோவை வடக்கு தாசில்தார் கோகிலா மணி என்பவரை சந்தித்து சான்றிதழ் வழங்கும்படி விண்ணப்பித்தார். அப்போது சின்னராஜிடம் தாசில்தார் ரூ.25 ஆயிரம் கொடுத்தால் தான் சான்றிதழ் தருவதாக சொன்னதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க மனமில்லாத சின்னராஜ் இதுகுறித்து கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
அதன்படி, லஞ்சஒழிப்பு துறையினரின் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூ.25 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை நேற்று முன்தினம் தாசில்தார் கோகிலா மணியை சந்தித்து வழங்கினார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கோகிலா மணி கையும், களவுமாக சிக்கினார். மேலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கோகிலா மணியை கைது செய்தனர்
லஞ்ச வழக்கில் கைதானதால் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதற்காக அவரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார். லஞ்ச வழக்கில் கைதான பெண் தாசில்தார் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் கோவை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .