ஒவ்வொருவருக்கும் அம்மா என்பவர் மிகவும் முக்கியமானவர். என் அம்மா கட்டுரை பெரும்பாலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கட்டுரை எழுதும் தலைப்பு. பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான அம்மா பற்றிய கட்டுரையை கீழே காணலாம்.
ஒவ்வொரு குடும்பத்திலும் தாய் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவள். தாய் தான் குழந்தைக்கும் மிகவும் பிடித்தமான நபர். ஒரு குழந்தையின் வாழ்க்கையில் தாயின் பங்கு இன்றியமையாதது. அம்மாவை போல் குழந்தையிடம் யாரும் அன்பு செலுத்திவிடமுடியாது. தாயின் அன்பு மிக பெரியது. ஒவ்வொரு தாயும் தன் குழந்தைகள் மற்றும் குடும்பம் என்று வரும்போது தன்னலமற்றவர்களாக மாறுகிறார்கள். தன் குழந்தைகளை மகிழ்ச்சியாகப் பார்க்க வேண்டும், வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்பதே அவர்களது எண்ணம்.
என் அம்மா ஒரு அசாதாரண பெண்மணி. அவள் ஒரு மருத்துவர். மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற அயராது உழைத்துக்கொண்டே இருப்பவர். என் அம்மாவைப் நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவர் ஒரு மருத்துவராக இருந்தாலும், என் தேவைகளைக் கவனிக்கத் தவறியதில்லை. எப்போதும் என்னை ஊக்குவித்து கொண்டிருப்பவர் தான் எனது அம்மா. எனக்கு சிறந்த வழிகாட்டியாக திகழ்பவரும் என் அம்மா. என் அம்மா என்னையும், என் தந்தையையும், சகோதரனையும், சகோதரிகளையும் கவனித்துக்கொள்வார். எல்லோரும் எப்போதும் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்பதே அவரின் விருப்பம்.
நான் எப்போதும் என் அம்மாவை நேசிக்கிறேன், ஏனென்றால் நான் அவளை நேசிப்பதை நிறுத்த முடியாது. எனக்கு உயிர் கொடுத்தவள் அவள். நான் இந்த உலகில் பிறந்த நாள் முதல் அவள் என்னை வளர்த்து வருகிறாள். அவளுடைய ஆதரவும் அன்பும் இல்லாவிட்டால், நான் இந்த நிலையில் இருந்திருக்க முடியாது. பிறரிடம் எப்படி உரையாடுவது , எப்படி அன்பாக இருப்பது, எப்படி சாப்பிடுவது, எப்படி நடப்பது, என்னை நானே எவ்வாறு கவனித்துக் கொள்வைத்து,ஆகிய நான் வாழ்வதற்கு தேவையான அனைத்தையும் அவள் எனக்குக் கற்றுக் கொடுத்தாள். என்னுடைய முதல் ஆசிரியை அவள், என் வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் எல்லாம் நன்றாக இருப்பதை உறுதிசெய்ய என்னைப் பாதுகாத்து வழிநடத்தினாள். அவள் ஒருபோதும் நான் சிக்கலில் இருப்பதை விரும்பவில்லை. எதுவாக இருந்தாலும் அவள் என் பக்கமே இருப்பாள். எதுவாக இருந்தாலும் அவள் என்னை ஆதரிப்பாள். என் அம்மாதான் என் வாழ்க்கையில் பெரிய பெண்.
உடலளவில் மென்மையானவளாக இருப்பினும், மன வலிமை பொருந்தியவர் என் அம்மா. அவரின் தற்போதைய நிலையை அடைய பல சவால்களையும் சிரமங்களையம் எதிர்கொண்டார். விடாமுயற்சி, கடின உழைப்பு போன்ற பல சிறந்த குணங்களை என் அம்மாவிடம் இருந்து நான் கற்றுக்கொண்டேன். அவள் எனக்கும் என் குடும்பத்துக்கும் மிகப்பெரிய பலமாக இருப்பவள். கடினமான நேரங்களிலும் சிரித்த முகத்துடன் எப்போதும் இருப்பார். எந்தச் சூழ்நிலையிலும் மனம்தளரமாட்டார் . கோபம் ஒரு மனிதனின் மிகப்பெரிய எதிரி என்று எப்பொழுதும் என் அம்மா கூறுவார் கூறுவார்.
எனக்கு முன்மாதிரி யார் என்று கேட்டால், சற்றும் யோசிக்காமல், என் அம்மா என்றுதான் சொல்வேன். ஆம், என் அம்மாதான் எனக்கு முன்மாதிரி. அவள் கனிவானவள், தன்னலமற்றவள், புத்திசாலி, என் வாழ்க்கையின் சிறந்த பெண். நான் எல்லாவற்றையும் விட என் தாயை நேசிக்கிறேன், அவள் இல்லாமல் நான் ஒன்றுமில்லை.